தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறைகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திடவும், பணி நியமனம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

 • விடைகள்

  1. தேர்வு முடிவடைந்த பின்னர் கொள்குறி வகையைச் சார்ந்த தேர்வுகளுக்கான விடைகள் உடனடியாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  2. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு இவ்விடைகள் குறித்து ஏதேனும் மறுப்பு இருப்பின் அது குறித்த கோரிக்கைகளை ஏழு நாட்களுக்குள் தேர்வாணையத்திற்கு தெரிவிக்க கால அவகாசம் அளிக்கப்படும்.
  3. அக்கோரிக்கைகள் கூர்ந்தாய்வுக்காக வல்லுநர் குழுவிடம் அளிக்கப்பட்டு, சரியான இறுதி விடைகள் அனைத்து தெரிவு பணிகளும் முடிவடந்தவுடன் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்படும். இவ்விடைகளைக் கொண்டு, தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய விடைகளோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்துகொள்ள ஏதுவாக அமையும்.
  4. இத்தகைய முறை தேர்வாணையத்தின் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்தும்.
 • தேர்வுகள்

  1. தேர்வுக்கூடங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு அனைத்துத் தேர்வு மையங்களும் ஒளிப்பதிவு கருவிகளின் வழியாக கண்காணிக்கப்படுகிறது.
  2. வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நேர்காணல் தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
  3. மாற்றுத் திறனாளிகளின் வசதியினை கருத்தில்கொண்டு அனைத்து தேர்வுக்கூடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் தரைதளத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். தேவைப்படின் தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்களும் நியமிக்கப் படுவார்கள்.
 • ஆண்டுத் திட்டம்:

  தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்ட வெளியீடு விண்ணப்பதாரர்கள் (ம) அரசுத்துறைகளுக்கு கீழ்க்கண்ட வகையில் உதவிகரமாக அமைகிறது.

  1. விண்ணப்பதாரர்கள், இந்த ஆண்டுத்திட்டத்தின் மூலமாக எதிர்வரும் தேர்வுகளுக்கு தங்களை முன்னதாகவே தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும்.
  2. அரசுத் துறைகள். தங்கள் துறைகளுக்கு தெரிவு செய்யப்படும் பணியாளர்களுக்கான பயி[ற்சித் திட்டங்கள் உள்ளிட்ட மனிதவள ஆதார நிர்வாகம் குறித்தும் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
  3. தேர்வாணையம். தனது ஆண்டுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நிறைவு செய்ய உதவிகரமாக அமையும்.
 • இணைய வழி விண்ணப்பமுறை

  1. இனி வருங்காலங்களில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இணைய வழி விண்ணப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்த தேர்வாணையம் தீர்மானித்துள்ளது.
  2. இணைய வழி விண்ணப்பப் படிவம் இரு மொழிகளில் இருப்பதுடன் பயன்பாட்டிற்கு எளிதாகவும், விண்ணப்பதாராpன் அடிப்படை மற்றும் முக்கிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
  3. தேர்வுக்கட்டணத்தினை குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும், தமிழகத்தின் அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளிலும் செலுத்தலாம். மேலும், இணைய வங்கி மூலமாக கடன் (ம) பண வரவு அட்டைகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்..
  4. கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள், இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்கு, தேர்வாணையம் மாநிலம் முழுவதிலும் குறைந்த பட்சம் [ 500 உதவி மையங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
 • நிரந்தரப் பதிவு

  • ஒவ்வொரு விண்ணப்பதாராரும், தனது அடிப்படை விவரங்களை குறைந்த கட்டணத்தில் கையொப்பம் (ம) புகைப்படத்துடன் நிரந்தரமாகப் பதிவு செய்யும் முறையினை தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பதிவானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • இப்பதிவினை விண்ணப்பதாரர்கள் தேவைப்படும் நேரத்திலும், புதிய தேர்விற்காக விண்ணப்பிக்கும் பொழுதிலும். மாற்றியமைக்க / திருத்தம் செய்யப் போதுமான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. மேலும். விண்ணப்பதாரர்கள் தொடர்பான நிரந்தர தரவுதளம் தேர்வாணையத்தால் பராமரிக்கப்படும்.
  • இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களது இனம், கல்வித் தகுதி போன்ற அடிப்படைத் தகவல்களை ஒவ்வொரு புதிய பதவிக்கு விண்ணப்பிக்கும் பொழுதும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தங்கள் தேர்வு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (ம) மின்அஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.
 • கலந்தாய்வு

  • கடந்த பிப்ரவரி 2012 முதல் தேர்வாணையம். பணி (ம) அலகு ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தும் பொருட்டு கலந்தாய்வு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கலந்தாய்வு முறையில் காலிப்பணியிடம் குறித்த விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரவர் விருப்பத்திற்கிணங்க நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பணி மற்றும் அலகு ஒதுக்கீடு அப்பொழுதே செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளின் கலந்தாய்வின் இறுதியிலும், எஞ்சியுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.
 • கணினிமயமாக்கல்:

  • தேர்வாணையம், தேர்வு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் கணினிமயமாக்குவதன் மூலம் முழுமையான தேர்வு முறை மேலாண்மைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது,
  • இதன் மூலம் பிழையற்ற முறையில். குறுகிய காலத்தில் தேர்வாணையத்தின் தெரிவுப் பணிகள் நிறைவடையும். மேற்காண்ட திட்டமானது, ஒரு தனியார் முகமையின் மூலம் தகவல் பாதுகாப்புத் தணிக்கைக்கும் உட்படுத்தப்படும்.
 • ஒற்றைச் சாளர முறை

  • தேர்வாணையம், தொடர்புடைய துறைகளிலிருந்து பெறப்படும் மாறுதல் வழி நியமனம் / பதவி உயர்வு வழி நியமனம் தொடர்புடைய கருத்துருவினைக் கூர்ந்தாய்வு செய்த பின்னர் துறை பதவி உயர்வக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து, பதவி உயர்வினை வழங்குகிறது. இம்முறையில் தேர்வாணையம் ஒற்றைச் சாளர முறையினை அறிமுகப்படுத்தி செயல்படுத்துகிறது. அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
  • அரசுத் துறைகள் தங்களது துறையின் இணைச் செயலாளர் / இயக்குநர் நிலையிலுள்ள உயரதிகாரிகளின் மூலமாக, மாறுதல் வழி நியமனம் / பதவி உயர்வு வழி நியமனம் தொடர்புடைய கருத்துருக்களை தேர்வாணையத்திற்கு நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். அக்கருத்துருக்கள் தேர்வாணையத்தின் உயர் அலுவலர்களால் அன்றைய தினமே கூர்ந்தாய்வு செய்யப்படும்
  • கூர்ந்தாய்வு செய்யப்பட்ட முழு வடிவத்திலான கருத்துருவானது தொடர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். இத்துறை தொடர்பான பதவி உயர்வு குழுக் கூட்டம் அடுத்து வரும் வாரத்தில் கூட்டப்படும்.
  • முழுவடிவம் பெறாத கருத்துருக்கள் திருத்தப்படவேண்டிய குறிப்புடன் மீள அனுப்பப்படும்.